கெடுப்பது ஒழி

கெடுப்பது ஒழி

பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே. 

இன்று சிறு கதை...

யமலோகத்துக்கு ஒரு சுற்றுலா! ஒரு கதை ஒரு நீதி

நாம் செய்வது யாருக்குத் தெரியப் போகிறது?’ இந்த நினைப்புக்கூட, மற்றவர்களுக்கு தீமை செய்து துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஒருவருக்குத் தோற்றுவித்துவிடும். மற்றவரைத் துன்புறுத்திப் பார்க்கும் குரூர புத்திக்கு இறைவன் என்றும் துணை போவதே இல்லை. மாறாக, தர்மம், அந்த எண்ணத்துக்கான தண்டனையை உடனே தயார் செய்து வைத்துவிடுகிறது. உரிய நேரம் வரும்போது, தீமை செய்தவனுக்கான தண்டனையை அள்ளிக் கொடுக்கிறது. ‘மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு’ என்கிறது திருக்குறள். அதாவது, `ஒருவர் மறந்தும்கூட மற்றவருக்குத் தீமை செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால், அறக் கடவுளே அவனுக்குத் தீமையைத் தர எண்ணிவிடும்’ என்பது இதன் அர்த்தம். இந்த நீதியை விளக்கிச் சொல்கிறது நம் புராணக் கதை ஒன்று. 

யமலோகம். யாருமே எட்டிப் பார்க்க விரும்பாத ஓர் இடம். கருடபுராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தாலும்கூட, அங்கு மனிதர்களின் பாவங்களுக்குத் தரப்படும் தண்டனைகளும், நரகத்தின் சூழலும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. அப்படிப்பட்ட யமலோகத்தைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டார் ரிஷி சிலாதர். அவருடைய இயற்பெயர் வேறாக இருக்க, `சிலாதர்’ என்ற காரணப் பெயர் வருவதற்கு அந்தச் சம்பவமே காரணமாகிவிட்டது. 

சில முனிவர்களுக்கு மூன்று லோகங்களிலும் சஞ்சாரம் செய்யும் வல்லமை உண்டு. அதை தபோ பலம், யோக சக்தி என்பார்கள். ரிஷி சிலாதருக்கும் அது உண்டு. யமலோகத்துக்குப் போனார். முற்றும் துறந்தவர்; வரம் கொடுக்கவும் சாபம் கொடுக்கவுமான சக்தி படைத்தவர்; யமதர்மனும், சித்ரகுப்தனும், யம தூதர்களும் அவரை வணங்கி, வரவேற்றார்கள்; அவருக்கான பணிவிடைகளைச் செய்தார்கள்; உபசரித்தார்கள்.  

“முனிவரே! ஏது இவ்வளவு தூரம்? யமலோகத்தின் அன்றாடப் பணிகளைப் பார்வையிட வந்திருக்கிறீர்களா?’’ வெகு பவ்யத்தோடு கேட்டான் யமதர்மன். 

   அப்படிக் காரண, காரியங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ தோன்றியது, கிளம்பி வந்துவிட்டேன்... ஏன் யமதர்மா! நான் இங்கே வந்ததில் உனக்கு ஏதாவது சிரமம் நேர்ந்ததா?

அபசாரம்... அபசாரம்... தெரியாமல் கேட்டுவிட்டேன். முனிபுங்கவரே... இது உங்கள் இல்லம். மூவுலகமும் உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு உடைமை. ரிஷிகளும் தவசீலர்களும் இருப்பதால்தான் இயற்கை செழிக்கிறது... எல்லாக் காரியங்களும் எல்லா இடங்களிலும் தர்மப்படி நடைபெறுகின்றன. தர்மம் தழைத்தோங்க வழிசெய்யும் உங்களுக்குத் தடை சொல்லத் துணிவானா இந்த யமதர்மன்? எப்போது வேண்டுமானாலும் தாங்கள் இங்கே வரலாம். உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என ஆணையிடுங்கள் மாகானுபாவரே... செய்வதற்குச் சித்தமாக இருக்கிறேன்.’’ 

முனிவர் இதழ்களில் மென்நகை எழுந்து மிளிர்ந்தது. யமனின் சபையை தன் கண்களால் சுற்றிப் பார்த்தார். தண்டனை பெறக் காத்திருக்கும் மனித ஆத்மாக்களின் வரிசை நீண்டு நின்றுகொண்டிருந்தது. சித்ரகுப்தனின் முன்னே மனிதர்களின் பாவங்களின் பட்டியலைக் காட்டும் மந்திரப் புத்தகம் விரிந்து கிடந்தது. பாவாத்மாக்களை களத்துக்கு அழைத்துப்போக, யம கிங்கரர்கள் தத்தம் கொடூர ஆயுதங்களுடன் ஆயத்த நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள். யமதர்மனின் ஆசனத்துக்கு முன்னே அவனுடைய எருமை வாகனம் அசையாமல் சிலைபோல நின்றிருந்தது. யமனின் ஆசனத்துக்குப் பக்கத்தில் பாசக் கயிறு அடுத்து யாரிடம் வீசப்படப்போகிறோமோ என்கிற நினைப்பில் சுருண்டு படுத்திருந்தது. 

“ஒன்றும் வேண்டாம் யமதர்மா! எனக்கு யமலோகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். அதற்கு நீ வரவேண்டிய அவசியம் இல்லை. உன் தர்ம காரியத்துக்கு இடையூறாக நான் இருக்க மாட்டேன். வேறு யாரையேனும் அனுப்பு!’’ 

யமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற-பாரபட்சமற்ற நீதி, நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார். தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். ‘இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்?’ நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.  

மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம்கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?! சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார். 

இருவரும் நடந்துவரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர். 

இது என்ன... கற்பாறை?” 

“ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம்... இப்படி வளர்ந்து நிற்கிறது!’’ 

“சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்

பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான். அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்தக் கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது. விதி முடியும் நேரத்தில் அவன் யமலோகத்துக்கு வரும்போது இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இதுதான் அவனுக்கான தண்டனை'' என்றான் சித்ரகுப்தன்.

அசந்துபோனார் முனிவர். இருவரும் நடந்தார்கள். முனிவருக்கு அந்தச் சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம். ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல... சாட்சாத் அவரேதான்.  

தன் தவறை உணர்ந்தார், யமதர்மனிடம் போனார். நடந்ததைச் சொன்னார். 

யமதர்மா... நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்குத் தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும். எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கல்லை தின்று செரித்துவிடுகிறேனே...’’ 

முனிவரின் கோரிக்கையை யமதர்மன் ஏற்றான். கல்லைச் சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். `சிலா’ என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர், `சிலாதர்’ ஆனார். 

எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் வினையாக வளர்ந்துகொண்டே போகும். ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். இதை உணர்ந்தவர்கள் எறும்புக்குக்கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள். சிலாதரின் கதை இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது. 


Comments