இளமையில் கல்

ஆத்திச்சூடி நீதிகதைகள்

29.இளமையில் கல்

மனிதனின் வாழ்வியற் பருவங்களுள் குறிப்பிடத்தக்க பருவங்கள் இரண்டு. அவையாவன1. இளமைப் பருவம், 2. முதுமைப் பருவம் என்பன ஆகும். இப்பருவங்களை வாழ்க்கையில் தொடக்கம், முடிவு என்று குறிப்பிடுவர். இவ்விரு பருவங்களும் வாழ்வில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் இயல்பை உடையன. இளம்பருவத்தில் பலர் சாதனையாளர்களாக விளங்குவதைப் போல முதுமைப் பருவத்திலும் உலகில் பலர் சாதனைகள் புரிந்துள்ளனர். சாதிப்பதற்கு வயதில்லை என்பதனையே இது காட்டுகிறது. நமது முன்னோர்கனள் இவ்விருபருவங்களையுப் பற்றியும் பல அரிய கருத்துக்களைப் பழமொழிகள் வழி கூறியுள்ளனர்.

இளமை

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் விரும்பும் பருவம் இவ்விளமைப் பருவமே ஆகும். இளங்குழவிப் பருவம், குழந்தைப் பருவம், இளமைப் பருவம்(குமரப் பருவம்) எனப் பருவங்கள் பல இருப்பினும் இவ்விளமைப் பருவம் மட்டுமே மனிதனி் மனதில் பல மாற்றங்களுக்கு வழி வகுக்கும் மகிழ்ச்சி நிறைந்த பருவமாகும். உடலும், உள்ளமும் விரைந்து செயல்படக் கூடிய பருவமும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பருவத்தினை,

‘‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு’’

என்று வழக்கில் மக்கள் வழங்குவர்.

பாம்பு விரைந்து ஓடும் தன்மை வாய்ந்தது. அதன் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடி அதனை மிதிக்கக் கூடிய வேகமும் துடிப்பும் மிக்கவர்கள் இளைமையுடையோரோ ஆவர் என்பதை மேற்கூறிய தொடர் நமக்குத் தெளிவுறுத்துகிறது.

இளமையின் வேகம்

இளம் வயதுதான் துணிச்சல் மிக்க வயது. உடலும் உள்ளமும் ஈடுகொடுத்துச் செயலாற்றக் கூடிய தன்மை இவ்வயதிலேயே ஒருவருக்கு வாய்க்கும் எனலாம். இவ்விளம்பருவம் எதைக் கண்டும் அஞ்சாது. இத்தகைய சிறப்புடைய இளமைப் பருவத்தின் தன்மையினை,

‘‘இளங்கன்று பயமறியாது’’

என்ற முதுமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.

இம் பசுங்கன்று எங்கும் ஓடித் திரியும். பயம் என்பது அறியாது. அதுபோன்றே இளம் வயதுடையவர்களும் எது குறித்தும் அஞ்சாது னெ்ன செய்துவிடும் பார்த்துக் கொள்வோம் என்று பிறர் செய்யத் தயங்குவதனையும் செய்து முடிப்பர்.

மகாபாரதத்தில் வரும் அருச்சுனன் மகன் அபிமன்யு இளம் வயதில் அனைவரும் வியக்கத்தக்க அஞ்சத்தக்கச் செயலான துரோணரின் வியூகத்தை பயமறியாது உடைத்து உள்ளே புகுந்து போரிட்டுப் பலரால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டான். இளமை பயமறியாது செயல்படும் தன்மை கொண்டது என்பதனை விளக்குவதாக இப்பழமொழி அமைந்திலங்குகிறது.

இளமையும் கல்வியும்

இளம் வயதில்தான் அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியும். பச்சை மரத்தில் ஆணி அடித்தால் எங்ஙனம் அதிவேகமாக இறங்குமோ அதுபோன்று இளம் வயதில் விரைவில் அனைத்தையும் கற்கலாம். மனமானது எதனையும் உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் வாய்ந்தது இளமைக் காலம். இதனைக் கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள்,

‘‘இளமையில் கல்’’

என்று பழமொழி வாயிலாகக் கூறியுள்ளனர். இளமையில் கற்கும் கல்வி அடிப்படையானது. இளமையில் கற்பது அனைத்திற்கும் அஸ்திவாரம் போன்றதாகும். அதனால்தான் நமது அரசும் உலகி்ல் உள்ள ஏனைய அரசுகளும் தொடக்க நிலைக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துக் கட்டாயக் கல்வியினைச் சட்டமாக்கியுள்ளன என்பது நோகத்தக்கது.

இளமை – உழைப்பு

இளமைக் காலத்தில் கடினமாக உழைத்தால் வாழ்வில் என்றும் உன்னத நிலையை அடையலாம். அவ்விளமைக் காலம் ஒருவனது வாழ்வில் பல்வேறுவிதமான முன்னேற்றங்களுக்கு மூல காரணமாக விளங்குகிறது. இதில் பாடுபட்டு உழைத்தால் அடுத்து வரும் முதுமைப் பருவம்இனிமையானதாக அமையும். முதுமைப் பருவத்தில் மகிழ்வுடன் ஒருவன் வாழ விரும்பினால் இளமைக் காலத்தை வீணாக்காது, சோம்பலுறாது உழைத்தல் வேண்டும். இத்தகைய வாழ்வியல் முன்னேற்றக் கருத்தினை,

‘‘இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது. இளம் வயதிலேயே உழைக்கின்ற எண்ணமும் பழக்கமும் ஒருவனிடததிலே ஏற்பட்டுவிட்டால் அவன் வாழ்வு சிறப்படையும் என்பதை இப்பழமொழி வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

வழக்கில் மூத்தது என்றும் ஒன்றுமில்லாதது என்பர். மூத்தவராகப் பிறப்பவரை மூத்தது, மூத்தவர் என்று கூறுவர். இளையது, இளையவன், இளையவர் என்று இளமையானவரைக் குறிப்பிடுவர். இளையவர்களை வேகம் நிறைந்த துடிப்புடன் விளங்குபவராகச் சமுதாயத்தில் கருதுவர். இதனை,

‘‘மூத்தது மோளை இளையது காளை’’

என்ற பழமொழி விளக்குகிறது. வயதில் மூத்தோர் சற்று யோசித்து நிதானமாகச் செயல்படுவர். இளையோர் எந்தச் செயலிலும் விரைந்து காளை வேகமாக ஓடுவது போன்றும் செயல்படுவது போன்றும் செயல்படுவர் என்பதை மேற்குறிப்பிட்ட பழமொழி தெளிவுறுத்துகிறது.

தேய்ந்தற்று ஒழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர் சடை நந்தியை
ஓர்ந்தற்றுக் கொள்ளும் உயிர்
உள்ள போதே
(திருமந்திரம்-179)

கருத்து: இளமை சிறிது சிறிதாகத் தேய்ந்து, ஒருநாள் முற்றிலுமாக நீங்க, முதுமை வந்து சூழ்ந்து கொள்கிறது. இவ்வாறு முதுமை வந்தபின், செய்து முடிக்க  வேண்டிய பல நல்ல செயல்களைச் செய்ய இயலாமல் போகும். ஆகையால், உடலில் உயிர் உள்ளபோதே, இளமையும் வலிவும் இருக்கும்போதே, கங்கை ஆறு  பாய்ந்து அடங்கியிருக்கும் விரிசடை உடைய சிவபெருமானை எண்ணி உள்ளத்தில் இருத்திக் கொள்ளுங்கள்.

ஞான நூல்கள் அனைத்தும் சொல்லும் தகவல் இது. ‘வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும்’ எனத் திருக்குறள் விடுக்கும்  எச்சரிக்கையும் இதுவே. பெரும் எச்சரிக்கையுடனேயே பாடலைத் துவக்குகிறார் திருமூலர். இளமை சிறிது சிறிதாகத் தேய்கிறதாம். உண்மைதானே!  உணர்வதற்குள் போய் விடுகிறது, இளமை. இந்த இளமைக் காலத்தில்தான், மனம் பலவிதங்களிலும் அலைபாய்கிறது. படிப்பிலும் சரி, பல்விதக் கலைகளிலும்  சரி, உலக அனுபவங்களிலும் சரி, எத்தனையோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எதைப் பின்பற்றுவது என யோசித்து முடிவெடுப்பதற்குள், காலம்  போய்விடுகிறது. வந்தவற்றில் தோ்வுசெய்து ஒதுக்கிய நாம், கடைசியில் கிடைத்ததை ஏற்கும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

பல்லக்கு மூங்கில்

“ வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம்

வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்

வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து

தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்”

பொருள்: இளமையில் பல்லக்குத் தண்டு போல வளைத்துவிடப்பட்ட மூங்கில் பின்னர் மன்னர்களைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயரும். அப்படி வளையாத மூங்கிலின் கதியோ பரிதாபமானது. கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத் திரியும். இதேபோல இளமையில் கஷ்டப்பட்டு கல்வி கற்பவர்கள் மேல்நிலையையும் கல்லாதவர்கள் தாழ்வான நிலையையும் அடைகின்றனர்.

குமர குருபரர், ஒரு மூங்கில் கழியை வைத்து அழகான கருத்தை விளக்குகிறார். கோவிலில் இருந்து உலா வரும் சுவாமியை பல்லக்கில் தூக்கி வருவதை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கான வளைந்த மூங்கில் எங்கே விளைகிறது? எங்கேயும் விளையாது. மூங்கில் வளரும் காலத்திலேயே அதைப் பல்லக்குக்குத் தேவைப்படும் மாதிரியில் வளைத்து வளரவிடுவார்கள். அது முற்றிய பின்னர் அதைப் பல்லக்குக்குப் பயன்படுத்துவர். இதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுகிறோம்.

இளைஞன் முதுகில் யானை!

ஒரு சர்கஸில் 5 அல்லது 6 டன் எடை உடைய ஒரு யானை சுமார் 100 கிலோ எடை உடைய ஒரு மனிதன் மேல் நிற்பதைப் பார்த்து எல்லோரும் வியந்தார்கள். அவன் படுத்தவுடன் அவன் மீது ஒரு பெரிய பலகையை வைப்பார்கள். அதன் மீது யானை ஏறி நிற்கும். இதைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர் அவரைப் பேட்டி காணச் சென்றார். ‘நீங்கள் யோகாசனம் பயின்று ஏதேனும் அபூர்வ சக்தி பெற்றிருக்கிறீர்களா? எப்படி இதைச் செய்ய முடிகிறது? என்று பத்திரிகை நிருபர் கேட்டார். அதற்கு அந்த இளைஞர், நான் பள்ளிக்கூடம் கூட போனது இல்லை, எனக்கு யோகமும் தெரியாது, ஆசனமும் தெரியாது. இந்த யானை குட்டியாக இருந்தபோது இந்த சர்க்கஸ் அதை விலைக்கு வாங்கியது. அன்று முதல் என் மீது ஏறி நிற்கும் பயிற்சியைத் துவக்கினார்கள். அது சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதானபோதும் எனக்கு பாரம் தெரிவதில்லை என்றார்.

இது நம் வாழ்க்கையில் பெரிய உண்மையைப் போதிக்கிறது. பல்லக்கு மூங்கில் போல வளையவும், பெரிய பாரத்தைச் சுமக்கவும் இளமை முதல் பயிற்சி தேவை.

Comments

  1. ஆத்திச்சூடி அல்ல, ஆத்தி சூடி
    பாவலர் தஞ்சை தர்மராசன்
    01.08.2020

    ReplyDelete

Post a Comment