கேள்வி முயல்


கேள்வி முயல்.

Kelvi Muyal

கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்
Listen to good advices/techniques from knowledgable/ experienced person

கற்றல் இருவகையில் நிகழும். ஒன்று: நூல்களில் இருக்கும் பல்வேறு கருத்துகளை நாமே படித்து அறிந்து கொள்ளுதல். இன்னொன்று: நல்ல கல்வி அறிவு உடையவர்களின் அறிவுரைகளைக் கேட்டல் என்பவை ஆகும். கற்றலை விடவும் கேட்டலே நன்று என்று நம் முன்னோர்கள் கருதினார்கள். அதையே ஒளவையாரும்
கேள்வி முயல்(39)
என்று பாடியுள்ளார்.

ஒவ்வொரு நூலாகத் தேடிப் பிடித்து நாம் கற்பது என்றால் அதற்கு நெடுங்காலம் ஆகும். ஆனால் பல நூல்களைக் கற்று அறிந்த அறிஞர்களின் உரையைக் கேட்பதன் மூலம் அந்த நூல் கருத்துகளை நம்மால் சில மணிநேரத்தில் அறிந்து கொள்ள முடியும்.

கேள்வி அறிவு என்பது கற்றவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும். கல்வி அறிவு இல்லாதவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும். இதைத் திருவள்ளுவர்,

கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை

(414)
(ஒற்கம் = மனத்தளர்ச்சி, ஊற்று = ஊன்றுகோல்)

என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவன் கல்வி அறிவு பெற்றவன் இல்லை என்றாலும், கல்வி அறிவு பெற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்க வேண்டும். அது அவனுக்குத் தக்க சமயத்தில் உதவும், அந்த உதவி எவ்வாறு இருக்கும் என்பதற்குத் திருவள்ளுவர் ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

முதுமையினால் தளர்ச்சி ஏற்பட்டவனுக்கு ஊன்றுகோல் எவ்வாறு உதவியாய் இருக்குமோ அதுபோல் மனத்தளர்ச்சி ஏற்படும் போது கேள்வியறிவு உதவும் என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இதையே நாலடியாரும்,

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர்

(139)
என்று குறிப்பிட்டுள்ளது.

கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.

இப்போது கதைக்கு வருவோம்

மகாமுனி என்னும் பெயர் கொண்ட முனிவர் ஒருவர் கங்கை நதிக் கரையில் ஆசிரமம் அமைத்து, சீடர்களுக்குத் தினமும் நீதி போதிக்கும் சாஸ்திரங்களையும், நல்லறங்களையும் கற்பித்து வந்தார். சீடர் களும் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் பாடங்களைக் கற்று வந்தனர்.
அவருக்கும், அவரது சீடர்களுக்கும் சமையல் செய்து போடுவதற்கு ஒரு வயதான பெரியவரை வேலைக்கு அமர்த்தியிருந்தார் முனிவர் மகாமுனி. அந்தப் பெரியவரின் சமையல் மிகவும் ருசியாக இருக்கும். தனக்குக் கொடுத்த வேலையை எந்தக் குறைபாடும் இல்லாமல் செய்து வந்தார் பெரியவர்.
அந்தப் பெரியவர் தனக்கு அவ்வளவாகக் கண் தெரியாததால், தனது வேலையில் உதவிக்காக, தன் பேரப்பிள்ளையை அமர்த்திக் கொண்டார். அதனால் அவரது பேரப்பிள்ளை தவறாமல் தினசரி ஆசிரமத்துக்குச் சென்று விடுவான். இப்படியாக அவரது சமையல் பணி பல வருடங்கள் நடந்து வந்தன.
ஒருநாள் முனிவர் மகாமுனி தனக்கு வயது அதிகமாகிக் கொண்டு இருந்ததால், ஆசிரமத்தை நிர்வகிக்கவும், தொடர்ந்து போதனைகள் நடைபெறவும் ஒரு நல்ல தகுதியும், பொருத்தமும் உடைய ஒரு சீடனை, தனது சீடர்களிலிருந்து தேர்ந்தெடுக்க விரும்பினார். உடனே தன்னுடைய சீடர்கள் அனைவரையும் அழைத்தார். அவர் களும் ஓடோடி வந்து முனிவர் முன் கைகட்டி நின்றனர்.
குருநாதரான மகாமுனி தனது சீடர்களைப் பார்த்து, ""எனதருமைச் சீடர்களே! இந்த வாழ்வு நிலையில்லாதது என்பதை என்னுடைய போதனையின் மூலம் நீங்கள் நன்கு தெரிந்திருப்பீர்கள். இப்போது எனக்கு வயது அதிகமாகி விட்டது. போதாக்குறைக்கு, நோயும் என்னைப் பற்றிக் கொண்டுவிட்டது. இனி முன்பு போல் என்னால் இந்த ஆசிரமத்தைக் கட்டிக் காத்து நிர்வகிக்க முடியாது. எனவே, உங்களில் ஒருவரை இந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்க இருக்கிறேன். இந்தப் பணி மிகவும் கடினமானது என்பது உங்களுக்குத் தெரியும். இத்தனை வருடங் கள் நான் பல விஷயங்களைப் பற்றி உங்களுக்குப் போதித்து இருக்கிறேன். இப்போது நான் உங்களுக்கு ஒரு தேர்வு வைக்கப் போகிறேன். அதில் வெற்றி பெறுபவரை ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்புக்கு நியமனம் செய்ய உள்ளேன்...'' என்று கூறினார்.
""தாங்கள் வைக்கும் தேர்வு எங்களுக்குச் சம்மதமே. எப்படிப்பட்ட தேர்வு என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா குருநாதரே!'' என்று சீடர்கள் கேட்டனர்.
""எல்லாம் கேள்வி ஞானத்தைச் சோதிக்கும் தேர்வுதான். வேறு என்ன தேர்வு வைக்கப் போகிறேன் நான்?'' என்று கூறிய குருநாதர், தனது தேர்வைத் தொடங்கினார்.
""மனித இனம் உய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்,'' என்றார்.
உடனே ஒரு சீடன் எழுந்து, ""குருவே! ஒரு மனிதன் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்தால் அவன் எளதில் உய்வு அடையலாம்,'' என்று பதில் சொன்னான்.
அந்தச் சீடன் கூறிய இந்த பதிலில் குருநாதர் திருப்தி அடையவில்லை. அதனால், அடுத்த சீடனைப் பார்த்தார். அந்த சீடன் பதில் சொல்லத் தயாரானான். அவன் தனது கைகளைக் கட்டியபடி மரியாதை யுடன், ""குருவே! ஒருவன் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் உய்வு பெறலாம்!'' என்று கூறினான்.
இந்தப் பதிலும் குருநாதரைத் திருப்திப் படுத்தவில்லை. ஆகவே, மூன்றாவதாக ஒரு சீடனைப் பார்த்தார். அவன் பதில் சொல்லத் தயாரானான்.
""மதிப்பிற்குரிய குருவே! ஒருவன் இறைவனை எப்போதும் பூக்களால் அர்ச்சித்துக் கொண்டே இருந்தால், அவன் எளிதில் இறைவனைத் தன் வசப்படுத்தி விடலாம். இறைவன் தன் வசமாகி விட்டால் உய்வு நம்மைத்தேடி தானே வராதா என்ன?'' என்று கூறினான் மூன்றாம் சீடன்.
இந்தப் பதிலும் குருநாதருக்குத் திருப்தி அளிக்கவில்லை. அதனால் அடுத்த சீடனைப் பார்த்தார். இப்படிப் பலரையும் கேட்டு, எவருடைய பதிலும் திருப்தி தராததால் மிகவும் மனம் வருந்தினார் குருநாதர். ஆசிரமத்தின் தலைமைப் பதவிக்கு ஆள் கிடைக்காமல் போய்விடுமோ என்று எண்ணினார்...
அப்போது, அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்த சிறுவன் குருவை நோக்கி ஓடிவந்தான். அவர் முன் விழுந்து வணங்கினான். அவன் குருவிடம், ""குருவே! தாங்கள் அனுமதி அளித்தால், உங்கள் கேள்விக்கு நான் விடை அளிக்கிறேன்,'' என்று கூறினான்.
சிறுவனின் ஆர்வத்தை அறிந்த குரு, அவன் கேட்டுக் கொண்டபடியே, தன் கேள்விக்குப் பதில் அளிக்க அனுமதி கொடுத்தார்.
மற்ற சீடர்கள் எல்லாம் அந்த சிறுவன் என்ன பதில் சொல்லப் போகிறானோ என்று எண்ணி வியப்போடும், ஆர்வத்தோடும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
""குருவே! ஒருவன் தன் வாழ்வு உய்வு பெற வேண்டுமானால், அவன் தன் மனதில் இருக்கும் பொறாமை, குரோதம், பேராசை, காமம், அகங்காரம் என்ற துர்க்குணங்களை அழிக்க வேண்டும். மனதில் உள்ள இத்தகைய அழுக்குகள் அகற்றப்பட்டால், நம்மில் இருக்கும் தூய ஆன்மாவை நாம் தரிசிக்க முடியும். அந்த நிலையே பேரானந்தம். அதுவே, மனிதன் உய்வு பெற்றுவிட்டான் என்பதற்கு உறுதியான காட்சியாகும்,'' என்று கூறினான் அந்தச் சிறுவன்.
சிறுவன் கூறிய இந்தப் பதிலைக் கேட்டு குரு அசந்து போனார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர்! மற்ற சீடர்கள் அனை வரும் அவமானத்துடன் தலை குனிந்து நின்று கொண்டிருந்தனர். குரு அந்தச் சிறுவனை அழைத்து கேட்டார்.
""தம்பி! நீ கூறிய பெரும் வாழ்வியல் தத்துவங்களை எல்லாம் என் சீடர்களுக்கு நான் பல ஆண்டுகளாகக் கற்றுக் கொடுத்து வருகிறேன். ஆனால், அவர்களுக்கு இது புரியாத நிலையில் என்னிடம் கல்வி பயிலாத நீ எப்படிக் கற்றுக் கொண்டாய்?'' என்று கேட்டார் குருநாதர்.
""குருவே! நான் என் தாத்தா கொடுக்கும் அரிசியில் இருக்கும் கற்களைப் பொறுக்க உட்காருவேன். அப்போது தாங்கள் தங்கள் சீடர்களுக்கு வாழ்வின் அறங்களை எடுத்துக் கூறுவீர்கள். நான் ஒரு கல்லை எடுத்து விட்டெறியும்போது, தாங்கள் அழுக்காற்றை மனதில் இருந்து அகற்ற வேண்டும் என்பீர் கள். அடுத்து நான் ஒரு கல்லை எடுக்கும் போது பேராசைகளை மனதிலிருந்து ஒழிக்க வேண்டும் என்பீர்கள். மீண்டும் ஒரு கல்லை நான் எடுக்கும்போது அகம் தூய்மை யாவதற்கு குரோதத்தை ஒழியுங்கள் என்பீர் கள். இப்படி நான் உங்களது உபதேசத்தைக் கேட்டுக் கொண்டே, அரிசியில் உள்ள கல்லைப் பொறுக்கி எறிவேன்.
""அப்போது தாங்கள், இப்படியாக அழுக்குகளை எடுத்த மனம் மாசு நீங்கி தூய்மையுடன் விளங்கும் என்று கூறுவீர்கள். அப்போது நான் அரிசியைப் பார்ப்பேன். கற்கள் நீங்கிய அந்த அரிசி தன் இயல்பான நிலையுடன் வெள்ளை வெளேர் என்று இருக்கும். அப்போது என் மனதில் மின்னலாக ஒரு எண்ண ஓட்டம் ஓடியது. நாமும் உண்மை நிலையில் ஆனந்தமானவர்களே! ஆனால், கற்கள் அரிசியை மாசு படத்தியது போல், நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் தான் சுபாவமான மனதின் தன்மையை மாற்றி, மாறான நிலையைத் தோற்றுவித்து விடுகிறது. இது பசுமரத்து ஆணியாக எனக்குள் பதிந்து விட்டது. அதைத்தான் தங்களிடம் கூறினேன் குருநாதரே,'' என்று தனது பதிலைச் சொல்லி முடித்தான் சிறுவன்.
குரு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சமையல்காரப் பெரியவரை அழைத்து, அவரது பேரனின் புத்திகூர்மை பற்றிப் புகழ்ந்து கூறினார். தேர்வில் அவரது பேரனே வெற்றி பெற்று விட்டதால், ஆசிரமத்துப் பொறுப்பை அச்சிறுவனிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.
கேள்வி ஞானம் என்பது, நாம் கேள்வி கேட்டு ஞானம் பெறுவது அல்ல. பிறர் கூறுவதைச் செவிமடுத்துக் கேட்பதன் மூலம் நாம் பெறுகிற ஞானமே கேள்வி ஞானம் ஆகும். எனவே, "கற்றலிற் கேட்டலே நன்று' என்ற கருத்தை உணர்ந்து கொண்ட சிறுவன் ஞானம் பெற்று உயர்நிலை அடைந்தான்.

Comments