கிழமைப்பட வாழ்.

ஆத்திசூடி நீதிகதைகள்

34.கிழமைப்பட வாழ்.

Kizhamaipada Vaazh

உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

குமணன் வள்ளலின் கதை...

அண்ணன் தலையை எடுத்துவரச் சொன்னான் தம்பி குமணன். அண்ணன் குமணன் நல்ல அரசர். மக்கள் அவர் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவருடைய தம்பி இளங்குமணனுக்கு அண்ணனின் புகழ் பிடிக்கவில்லை. அண்ணனைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, தானே அரசனாக விரும்பினான். இதை அறிந்த அண்ணன், தன் தம்பியிடமே நாட்டை ஒப்படைத்துவிட்டு காட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பிறகும் புலவர்களும் மக்களும் அண்ணனையே புகழ்ந்தனர். தம்பியை வெறுத்தனர். ஆத்திரமுற்ற தம்பி, அண்ணன் தலையை வெட்டி எடுத்து வருபவருக்குப் பொன் பரிசு என்று அறிவித்தான். பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் தம்பியிடம் பரிசு பெறச் சென்றார். அவரை, அவமதித்து அனுப்பினான் இளங்குமணன். நேராகக் காட்டிற்குச் சென்றார் புலவர். காட்டில் இருந்த குமணன், புலவருக்குத் தர தன்னிடம் ஏதும் இல்லையே என்று வருந்தினார். பிறகு புலவரிடம் தன் வாளைக் கொடுத்து என் தலையை வெட்டி எடுத்துப்போய் தம்பியிடம் கொடுங்கள், பரிசு தருவான் என்றார்.

புலவர் அரசரின் வாளை மட்டும் பெற்றுக்கொண்டு நாட்டிற்கு வந்தார். பெரிய குமணன் தலை போல் பதுமை ஒன்று செய்து எடுத்துக்கொண்டு இளங்குமணன் இருக்கும் அரண்மனைக்கு வந்தார். கையில் வாளுடன் வேகமாக ஒருவர் உள்ளே நுழைவதைப் பார்த்து விட்டான் இளங்குமணன். வந்த புலவர், அரசரே போன காரியத்தை வெற்றிகரமாக முடித்து வந்து விட்டேன் என்றார் மிடுக்குடன். இளங்குமணனுக்கு ஏதும் விளங்கவில்லை. அவன் புலவரையே பார்த்தான். அவர் கையில் இருக்கும் வாளை பார்த்தான். காட்டில் இருக்கும் உங்கள் தமையனின் தலையை வெட்டி எடுத்து வந்தால் பரிசு என்று அறிவித்திருந்தீர்கள் அல்லவா! நான் கொய்து வந்து விட்டேன் கொய்யா கனி போல! குருதி சொட்டுவதால் அவர் சிரசை வெளியில் வாயிலோனிடம் வீசிவிட்டு வந்திருக்கிறேன்... கொக்கரிப்புடன் சொன்னார் புலவர்.

ஒரு கணம் அதிர்ந்தான் இளங்குமணன். என்னது அண்ணனைக் கொன்று விட்டீர்களா? அவன் நம்பாமல் புலவர் கையில் இருந்த வாளை பிடுங்கிப் பார்த்தான். அது நிச்சயம் பெரிய குமணன் வாள்தான் என்பது அவனுக்குப் புரிந்தது. வாளில் ரத்தம் உறைந்திருந்தது. அறிவித்தபடி பரிசு கொடுங்கள் மன்னா! நான் விரைந்து வீடு சேர வேண்டும். புலவர் அரசனை அவசரப்படுத்தினார். புலவரே நீங்கள் சொல்வது உண்மைதானா? மன்னனின் குரல் உடைந்திருந்தது. ஆம் மன்னா! எனக்கு பரிசு தேவையாக இருந்தது. நான் காடு தேடிப்போனேன். உங்கள் தமையனோ எனக்கு சிரமமே கொடுக்காமல் வாளை கொடுத்து தலையை துண்டித்து எடுத்துச்செல்லும்படி கூறி விட்டார்.... உயிர் ஈந்து என்னை வாழ வைத்த வள்ளல் உங்கள் தமையன்.  புலவர் சொல்லச் சொல்ல, இளங்குமணனுக்கு மனம் நெகிழ்ந்தது. நான் கேட்டதும் நாட்டை ஒப்படைத்து விட்டு காட்டிற்குச் சென்ற அண்ணனை, உயிருடன் கூட வாழ விடாமல் இப்படி அநியாயமாகக் கொன்றுவிட்டேனே! நான் எவ்வளவு பெரிய பாவி... மனம் உடைந்து அவன் அழ ஆரம்பித்தான். நான் மாபெரும் தவறு செய்து விட்டேன் புலவரே! எனக்கு மன்னிப்பே கிடையாது.... அண்ணனின் வாளை பிடித்துக்கொண்டு அவன் கதற, மன்னனின் மன மாற்றம் கண்டு புலவர், உண்மையைச் சொன்னார். காட்டிற்கு ஓடினான் இளங்குமணன். தன் அண்ணனை அழைத்து வந்தான். அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தான்.

Comments