நன்றி மறவேல்

ஆத்திச்சூடி நீதிகதைகள்

21. நன்றி மறவேல்

நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது.
நாம் பேற்ற உதவிகளை அதன் மூலம் நாம் அடைந்த நன்மைகளை (நன்றை – நல்லதை) மறவாதிருக்கும் பண்பினைக் குறிப்பது இந்த செய்யுள். ஒரு உதவியின் மதிப்பை உணர்வதே அதற்கான முதல் படி. அப்படி உணர்ந்தொமேயானால் உதவி செய்தவருக்கு நன்றி பாராட்டுவதும், வேறோருவருக்கு இப்படியான சந்தர்ப்பத்தில் நாமே முன்வந்து தேவையான உதவியை செய்வதாகவும் அமையும். இது போன்றே நன்மைகள் (அறம்) பெருகும்.

நன்றி என்ற அறம் போற்றும் மற்றுமோரு ஒளவையார் அருளிய செய்யுள் ’மூதுரை’யிலிருந்து

பயன் கருதாது அறஞ்செய்க (மூதுரை)
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

நிலைபெற்றுத் தளராமல் வளர்கின்ற தென்னை மரமானது தான் அடியால் உண்ட தண்ணீரைத் தன் முடியாலே சுவையுள்ள இளநீராக்கித் தானே தருவதுபோல், ஒருவரின் உதவியை நாம் மறவாமல் நன்றி பாராட்டவேண்டும்.

ஆசிரியர்;-
நன்றி என்ற இந்த உயர்ந்த பண்பு – செய்த உதவி, பேற்ற உதவி, காலம், கேட்டு பேறுதல், கேட்காமல் செய்யதல், எதிர்பார்ப்பு என்று பல கோணங்களில் திருக்குறள் ‘அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்’ பகுதியில் எடுத்துரைக்கின்றிது
திருக்குறள்

'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு. ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து மறந்துவிடவேண்டும். அதேநேரத்தில் ஒருவர் நமக்கு செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது என்பதுடன், ஒருவர் தனக்கு செய்த நன்மையை நாம் மட்டுமல்லாமல், நம்முடைய பிள்ளைகளும் நினைவில் வைத்திருக்கும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அவர்களும் நாம் சொன்னதை நினைவில் வைத்திருப்பதுடன், அவர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்

ஒரு காட்டில் வேடன் ஒருவன், வேட்டையாடுவதற்காக மானைத் துரத்திக் கொண்டு போனான். அவன் கையில் விஷம் தோய்த்த அம்பு இருந்தது. வில்லில் அந்த அம்பைப் பொருத்தி மானைக் குறி பார்த்தான். காற்றைக் கிழித்துக் கொண்டு பாய்ந்தது அம்பு. அந்த மானுக்கு அதிர்ஷ்டம். சடக்கென நகர்ந்து தப்பித்தது. ஆனால் அந்த அம்பு, அருகில் இருந்த பழங்கள் நிறைந்த ஒரு மரத்தில் போய்க் குத்தி நின்றது. விஷம் தோய்ந்த அம்பாயிற்றே... விஷம் அந்த மரத்தில் ஏறிற்று. பழங்கள் எல்லாம் கருகிக் கீழே உதிர்ந்தன. காய்கள் வெம்பின. இலைகள் சிதறின. ஆமாம். அந்த மரமே ஒரே நாளில் பட்டுப் போயிற்று. அந்த மரத்தின் பொந்தில் ஒரு மைனா வெகுகாலமாக வசித்து வந்தது. விஷ அம்பினால் மரத்துக்கு நேர்ந்த கதியைப் பார்த்த மைனா கலங்கிப் போனது. ஆனால் வளமான வேறு மரத்திற்குச் சென்று குடியேற அதற்கு மனம் வரவில்லை. மரத்தின் மேல் உள்ள பற்றினால் நன்றி உணர்வோடு அங்கேயே இருந்தது. பழங்கள், காய்கள் இல்லாததால் மைனாவுக்கு உணவு கிடைக்கவேயில்லை. களைத்துப் போனது. ஆனாலும் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. மரம் சுகப்பட்டபோது தானும் சுகப்பட்டு, மரம் துயரப்படும் பாது தானும் துயரப்படும் மைனாவின் நேயத்தைப் பார்த்தான் தேவேந்திரன்.

மைனாவே எதற்காக இங்கே இருந்து கஷ்டப்படுகிறாய். வேறு மரத்திற்குப் போக வேண்டியதுதானே? என்றான். இல்லை, தேவேந்திரா! ஏராளமான நல்ல குணங்கள் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்தேன். இதுநாள் வரை என்னைக் காப்பாற்றியது இந்த மரம் தான். எனக்கு சுவையான கனிகளைக் கொடுத்தது. எதிரிகள் வந்தால் நான் ஒளிந்து கொள்ள இடம் தந்ததும் இதுதான். நல்ல நிலையில் இதன் நிழலில் இருந்த நான், அதற்கு ஒரு கெட்டநிலை வந்ததும் ஓடி ஒளிவது தர்மம் இல்லையே என்றது. தேவேந்திரன் மெய் சிலிர்த்துப் போனான். மைனாவே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றான். மைனா கேட்டது, தேவர்களின் அரசனே, இந்த மரத்தைப் பழையபடி நன்கு செழித்து வளர அருள்புரிவாயாக என்றது. அப்புறம் என்ன? மரத்திற்கு மீண்டும் உயிர் வந்தது. இலைகள், காய்கள், கனிகள் என்று ஜொலித்தது மரம்! மகிழ்ந்தது மைனா. இதுபோலவே, நீங்களும் உங்களை வளர்த்தவர்களை மறக்காமல் நன்றியுடனும், மரியாதையுடனும் அவர்களிடம் இந்த மைனாவைப் போல் நடந்து கொள்ளுங்கள்.

Comments