இணக்கம் அறிந்து இணங்கு

ஆத்திச்சூடி நீதிக்கதைகள்

19.இணக்கம் அறிந்து இணங்கு -ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர்நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும்கொண்டவரா எனத் தெரிந்த பிறகுஅவருடன் நட்பு கொள்ளவும்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்

"நல்ல நண்பனின் அடையாளம் நான்கு 1.அவனைப் பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வரும்.
2.அவனுடன் பேசினால் ஈமான் அதிகரிக்கும் 3.அவனுடன் உட்கார்ந்தால் அறிவு வளரும். 4.அவனுடைய செயல்கள் மறுமை நாளை நினைவுபடுத்தும்." திர்மிதீ:2144

நம்முடைய நட்பு வட்டம் எத்தகையது என்று தெரிந்து கொள்ள எளிதாக பனைமரம், தென்னைமரம், வாழைமரம் என்று நண்பர்களை மூன்று வகையாக பிரித்துள்ளனர் முன்னோர்கள்.

பனைமரம்

பனைமரம் யாராலும் நட்டு வைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தை தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்கு கிடைத்த தண்ணீரை குடித்து தானகவே வளர்கிறது. தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்கு தருகிறது. இதுபோல நம்மிடம் எந்த உதவியும் எதிர்பாராமல் நமக்கு உதவுபவனே பனைமரம் போன்ற நண்பன்.

தென்னை மரம்

தென்னை மரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்கு பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன் தென்னை மரத்துக்கு இணையான நண்பன்.

வாழைமரம்

வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றி கவனித்தால்தான் நமக்குப்பலன் தருகிறது. அதுபோல தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.

இந்த மூவரில் பனைமரம் போன்ற நண்பனைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நட்பின் வலிமையை உணர்த்தும் வகையில் புராணத்தில் பல கதைகள் கூறப்பட்டுள்ளன. நல்ல நட்பு அமைவது என்பது இறைவன் கொடுக்கும் வரமாகும்.

நல்ல நண்பனை அறிவது எப்படி?

நன்றி

அர்த்தமுள்ள இந்துமதம்

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக  அடையாளம் கண்டு கொண்டு விட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலம்தான் தெரியுமே தவிர, சாதாரண  அறிவினால் கண்டு கொள்ள முடியாது. முகத்துக்கு நேரே சிரிப்பவன். முகஸ்துதி செய்பவன். கூனிக்குழைபவன். கூழைக்கும்பிடு போடுபவன். இவனெல்லாம்  நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான். எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்! ஆகவே  ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளும் முன், அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப்  பரிமாறிக் கொள்ள வேண்டும். நன்றாக ஆராய்ந்து, ‘இவன் நல்லவன்தான்’ என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், பிறகு அவன்மேல்  சந்தேகப்படக்கூடாது. ‘‘அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத  துயரத்தைத் தரும்’’ என்றான் வள்ளுவன்.

‘‘நேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்’’.

-சரி, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி? யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழக வேண்டும். கொஞ்ச காலத்திற்கு அதை,  நீ நட்பாகக் கருதக்கூடாது. வெறும் பழக்கமாகத்தான் கருதவேண்டும். உனக்குக் கஷ்டம் வந்தபோது அவன் கை கொடுத்தால், உன்னப் பற்றி நல்லவிதமாக, நீ  இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால், பிறர் உன்னைப் பற்றித் தவறாகப் பேசும்போது அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால், அவனை நீ  நம்பத் தொடங்கலாம். தொடர்ந்து இது போன்ற பல செய்திகளைக் கேள்விப்பட்ட பிறகுதான், அவனை நண்பனாக நீ வரித்துக் கொள்ள வேண்டும். பல இடங்களில்  ஒரே மாதிரி ஒருவன் நடிக்க முடியாது. ஆகவே, உன்மீது அவன் வைக்கும் அன்பும் உண்மையாகத்தான் இருக்க முடியும். நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல.  ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு. நீ அழும்போது உண்மையிலேயே அவனுக்கும் அழுகை வருகிறது என்றால் அதுதான் நட்பு.

  ஸ்ரீராமனுக்குக் கிடைத்த நண்பர்கள்போல் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தால், துன்பங்களே  இல்லாமல் போய்விடும். ஸ்ரீராமனின் துன்பங்களை யார் யார் பங்கு போட்டுக்கொண்டார்கள்! அதை ரகுநாதனின் வாய்மொழியாகக் கம்பன் சொல்கிறான்.

குகனொடும் ஐவ ரானோம்
முனிபின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவ ரானோம்
எம்முறை அன்பின் வந்து
அகமலர் காதல் ஐய
நின்னொடும் எழுவ ரானோம்!’’
   
விபீடணன் நண்பனானபோது, அவனைப் பார்த்து ராமன் சொன்ன வார்த்தைகள் இவை. ‘‘வீடணா! நானும் இலக்குவனும், பரதனும், சத்ருக்கனனும் நான்கு  சகோதரர்களாகப் பிறந்தோம். கங்கை இரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான் குகனைச் சந்தித்த போது நாங்கள் ஐவரானோம். சுக்ரீவன் எங்களோடு  சேர்ந்தபோது நாங்கள் அறுவரானோம். உன்னைச் சேர்த்து இப்போது எழுவராகி விட்டோம்’’ ஆம்! ராமனுக்கு அவர்கள் செலுத்திய அன்புக் காணிக்கை  ராமனுடைய சகோதரர்களாகவே அவர்களை ஆக்கிவிட்டது. நல்ல நட்புக்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ அவை எல்லாம் கூடி வாய்க்கப் பெற்ற ஒருவன்  நண்பனாக மட்டுமின்றி சகோதரனாகவும் ஆகிவிடுகிறான். நண்பர்கள் தனக்கு உதவி செய்தார்கள் என்பதற்காகத் தன் சொந்த சகோதரர்களையே விரோதித்துக்  கொண்டு செஞ்சோற்றுக் கடன் கழித்து, ஒருவன் மகாபாரதத்தில் காட்சியளிக்கிறான் - அவனே கர்ணன்.

நல்ல நண்பர்களை இனம் காண முதல் நீ நல்ல நண்பனாய் இரு.ஆம் பிறர் எதை உனக்கு செய்யக்கூடாது என்று நினைக்கின்றாயோ அதை நீ பிறருக்கு செய்யாதே.

நாம் நல்ல நண்பனாக இருப்போம் நல்ல நட்பு தானாக தேடி வரும் அப்படி தேடிவரும் நட்பின் மனதை படிக்க தெரிந்திருந்தால் நாம் ஒவ்வொறுவரும் நல்ல நண்பர்கள்தான்

Comments

  1. ஸலாம் இப்படி ஒரு ஹதீஸே கிடையாது இதை பரப்பவேணாம் அப்படி இருந்தால் இந்த ஹதீஸ் அபிக் ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையோட பதிவும்

    ReplyDelete

Post a Comment