வஞ்சகம் பேசேல்

ஆத்திசூடி சிறுகதைகள்

27.வஞ்சகம்  பேசேல்  :

உள்ளொன்று  வைத்து  புறமொன்று  பேசாதே. உள்ளத்தில்  உள்ளதை  அப்படியே  பேச  வேண்டும்.நல்லது  நினைக்க  வேண்டும்.  நல்லது  பேச வேண்டும்.  எண்ணம், பேச்சு, செயல்  யாவும் நல்லனவாக இருக்க  வேண்டும்.

வள்ளலாரின் அறிவுரைகளில்  இதுவும் ஒன்று..

மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே

அனைவருக்கும் இந்த வஞ்சகம் என்ற எண்ணம் தோன்றும்
‘வார்த்தையால் கொல்லாமல், என்னை ஒரேயடியாகக் கொன்றுவிடு’. இப்படி யாராவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? நித்தமும் சாகின்ற கொடுமையைவிட ஒரேயடியாகச் செத்துப்போவது மேல். வாழ்க்கைப் போராட்டங்கள், விரோதங்கள், தீராத வியாதி போன்றவை நம்மை அன்றாடம் வேதனைப்படுத்தும். இவற்றைத்தான் பொறுத்துக்கொண்டாலும், இவற்றைப்பார்க்கிலும், மனித வாழ்வை நாசம்பண்ணக்கூடிய நஞ்சூட்டப்பட்ட கூரிய ஆயுதம் ஒன்றுண்டு, இது கொல்லும்; ஆனால் கொல்லாது. பகையை வெளிப்படுத்தாது; பாசம்போல நடிக்கும். இன்பம் சுரக்கும்; இன்னல்களுக்கு வழி வகுக்கும். சேர்ந்து அழும்; முதுகுக்குப் பின்னே சேற்றை அள்ளி வீசும். நல்லதுபோல வேஷம் போடும்; நாளடைவில் நயவஞ்சகத்துள் வீழ்த்திப்போடும். இதுவே மிகப் பெரிய ஆபத்து!

இயற்கை வெளிப்படையாகவே சீற்றம் கொண்டு நம்மை அழிக்கிறது. அதற்கு உலக நாடுகளே உதவி செய்ய முன்வரலாம். ஆனால் இந்த கூரிய அம்பின் தாக்குதலை உலகத்தாலும் உணரமுடியாது; எந்த நிவாரணமும் பரிகாரமும் உதவாது. ஏனெனில் இது சரீரத்தைத் தாக்குவதற்கு முன்னர், வெளியே காணப்படாத மனித உள்ளங்களையே முதலில் குத்திக்குதறுகிறது.

இன்னுமொரு உண்மையும் உண்டு. இந்த விஷ அம்பு யாருக்கு விரோதமாகக் குறி வைத்து எய்யப்படுகிறதோ, அவனை அது தாக்குமோ அழிக்குமோ அது ஒருபுறமிருக்க அந்த விஷ அம்பை யார் எய்கிறானோ, அவனை அது நிச்சயமாக அழிக்கும். இதை யாரும் சிந்திப்பதில்லை. ஏனெனில், முன்பின் யோசிக்காமல், பின்விளைவை சிந்திக்காமலே இந்த அம்பு பாய்ந்துவிடும்.

நாம் எல்லோருமே ஏதோவொரு விதத்திலே, ஏதோவொரு சந்தர்ப்பத்திலாவது, தெரிந்தோ தெரியாமலோ இதன் வஞ்சக அரவணைப்பில் திளைத்துக் கிடந்து அடுத்தவனை வேதனைப்படுத்தி மகிழ்ந்திருந்திருக்கலாம். அல்லது வேறொருவரால் எய்யப்பட்ட இந்த அம்பினால் நாமே இருதயத்தில் குத்துண்டிருக்கலாம். அல்லது, அடுத்தவனுக்கு நாம் எறிந்த அம்பினால் நாமே தாக்குண்டும் இருக்கலாம்; அது நாம் எறிந்த அம்புதான் என்று உணராமலே, ‘எனக்கு ஏன் இப்படி ஆனது’ என்று நாம் மனமடிவாகியுமிருக்கலாம்.

இதுதான் வஞ்சகத்தின் முகமுடி... தயவு செய்து

சீக்கிரம் கிழித்து எறியுங்கள்.. மனிதர்களே...

இப்போது கதைக்கு வருவோம்..

ஒரு குளக்கரை.

கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.

“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.

“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.

“அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.

“பரவாயில்லை சொல்லுங்களேன்”

“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”

மீனுக்குப் பரபரத்தது.

“சொன்னால்தானே தெரியும்”

“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.

“வரட்டுமே”

“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”

“அய்யய்யோ!”

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.

சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.

அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.

கொக்குக்கும் கசக்குமா காரியம்?

நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

“ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.

அதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா?

உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.

“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”

“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”

“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.

குளத்துக்கு நேராக வரும்போது

அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.

வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.

நமது

வஞ்சகம் சூதில்லாம சுழன்ற எங்கள் தமிழர் வாழ்க்கை முறை...!!
வெத்திலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,

ஆடு போட்ட புலுக்கையள்ளி காடு வளர்த்தோம்,

காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,

வளர்த்ததெல்லாம் விற்காம

அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,

நேர்ந்து விட்ட அதுகளை வெட்டதிருவிழா வச்சோம்,

திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,

உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.

பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க

தோட்டத்து வெத்திலையோடு உங்க வீட்டு பாக்கையும் வச்சோம்.

இப்படியே வஞ்சகம் சூதில்லாம சுழன்ற எங்க வாழ்க்கை முறை,

இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது.

Comments