அழகு அலாதன செய்யேல்

ஆத்திச்சூடி நீதிகதைகள்

28.அழகு அலாதன செய்யேல்.

இழிவான செயல்களை செய்யாதே

ஏழு பெரும் இழிவான செயல்கள்

இறைவனுக்கு இணைவைத்தல்
சூனியம் செய்தல்
நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்தல்
வட்டியை உண்ணுதல்
அநாதைகளின் சொத்தை விழுங்குதல்
போர் நடக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல்
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்

இழிவான செயல்களை செய்பவர்களை திருவள்ளுவர் பலவாறு இழிபெயர்களை கொண்டு அழைக்கிறார்

வஞ்சர்' (824), 'இசையிலா யாக்கையர்' (239), 'இனமல்லார்' (822), 'இசை வேண்டார்' (1003), 'இழிந்த மயிரனையர் '(964), உடம்பாடிலாதவர் (890), என்புதோல் போர்த்த உடம்பர் (80), ஒப்பிலார் (மாறுபட்டவர்) (800, 812), ஒட்டார் (பொருந்தாதவர்), (826), காரறிவாளர் (287), களவறிந்தார் (288, கீழ்கள் (10.75), கொடியர் (550), சிறியார் (970), சீரல்லவர் (977), நகைவகையர் (817, பண்பிலார் (81), பூரியர் இழிந்தவர், கீழ்மக்கள் (241, 918 பேதையர் (782, 797) மரம் போல்வர் (997), மக்கட் பதடி (பதர்) (196) மாணார் பெருமையில்லாதவர் (823), மெய்ப்பொருள் காணார் (857), வன்கண்ணவர் (228), வாழாதவர் (240), விளிந்தார் (செத்தவர்) (1430) முதலிய சொற்களால் குறித்து, அவர்களின் மனவுணர்வு, அறிவுணர்வு, செயலுணர்வு ஆகியவற்றில் உள்ள இழிவுகளையும், அவற்றால் அவர்களுற்ற தாழ்ச்சி நிலைகளையும் சுட்டிக் காட்டுவார்.

செய்தக்க அல்ல செயக்கெடும்  செய்தக்க

செய்யாமை  யானும் கெடும் (குறள் 466)

பொருள்:

ஒருவன் செய்யத் தகாதனவற்றைச் செய் தாலும் கெட்டுப்போவான்; மற்றும் செய்ய  வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் கெட்டழிவான்.

இதைத் தான், கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கும் சொன்னார். நீ க்ஷத்ரியன்; போர் செய்வது உன் தொழில். எழுந்திரு (உத்திஷ்ட) என்றார்.

புத்தனும் தம்மபதத்தில் (314) இதைச் சொல்கிறான்:

“கெட்டது செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். கெட்டது செய்தால் துன்பம் நம்மைச் சுட்டெரிக்கும்.  ஆகையால் நல்லதையே செய்யுங்கள். ஏனெனில் நல்லது செய்வோருக்கு என்றும் துன்பம் இல்லை” – இது புத்தன் வாக்கு

இப்போது கதைக்கு வருவோம்

குடியானவன் ஒருவன் இருந்தான். பண்பும் பக்தியும் மிகுந்தவன். அடிக்கடி அவனுக்கு ஒரு கனவு வரும். ஓர் ஒற்றையடிப் பாதையில் நடந்துசெல்வான். திரும்பிப் பார்த்தால், இரண்டு ஜோடி பாதச் சுவடுகள் தெரியும். ஒரு ஜோடி தன்னுடையது, மற்றது கடவுளுடையது என உணர்ந்து, அவர் எப்போதும் தன்னுடன் துணை இருக்கிறார் என்று மகிழ்வான். சட்டென்று அவன் வாழ்வில் துயரம் சூழ்ந்தது. கனவிலும் ஒரு ஜோடி பாதச்சுவடுகளை மட்டுமே கண்டான். சே! கஷ்டமான காலத்தில் கடவுள் நம்மைவிட்டுப் போய்விட்டாரே என்று வருந்தியவன், நேராகக் கோயிலுக்குச் சென்று, அவரிடமே முறையிட்டுப் புலம்பினான். அவன் முன் கடவுள் தோன்றி, எதை வைத்து நான் உன்னோடு இல்லை என்கிற முடிவுக்கு வந்தாய்? என்று கேட்டார். கனவில் என்னைப் பின்தொடரும் உங்களின் காலடிச் சுவடுகள் இப்போது இல்லையே? என்றான் குடியானவன்.

அதைக் கேட்டுப் புன்னகைத்த கடவுள் சொன்னார்.. இப்போதும் நான் உன்னுடன்தான் இருக்கிறேன். கனவில் நீ கண்ட காலடிச் சுவடுகளில் முன்னால் இருந்தவை என்னுடைய தடங்கள். பின்னால் தொடர்ந்தவை உனது காலடிகள். அதாவது, சுகமான காலங்களில் நீ என்னைப் பின்தொடர்ந்தாய். அதனால், உனக்குத் துன்பம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலத்தில், உன்னை நான் தூக்கிச் சுமக்கிறேன். அதனால்தான் துயரங்களால் நீ அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆக, இப்போது நீ கனவில் கண்டதும் எனது பாதங்களையே! அதைக் கேட்டுக் குடியானவன் அகமகிழ்ந்தான். கடவுளுக்கு நன்றி சொன்னான். இந்தக் கதையை நான் சொல்லிமுடித்தபோது, நண்பன் கேட்டான்.. கடவுள் நம்மகூடவும் இருப்பாரா?

நிச்சயமா இருப்பார். ஆனால், அதற்கு ஏதுவாக, இழிவான விஷயங்களை நம்மிடமிருந்து அகற்றிவிடவேண்டும் என்றான். வாஸ்தவம்தான்! பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது, உடல் உழைக்காமல் பிச்சை எடுக்கக்கூடாது. இந்த மூன்றும் இழிவானதுன்னு அப்பா அடிக்கடி சொல்லியிருக்கார் என்றான் நண்பன். நீ சொல்லும் இந்த மூன்றுக்கும்கூட விதிவிலக்கு உண்டு. ஆனால், விதிவிலக்கே இல்லாத இழிவு ஒன்று உண்டு என்ற நான், அதுகுறித்து நண்பனுக்கு விரிவாக விளக்கினேன். மற்றவர்களுக்கு நன்மை பயக்குமெனில், பொய்மையும் வாய்மைக்குச் சமம் என்கிறார் வள்ளுவர். இந்த இடத்தில் பொய்மைக்கு விதிவிலக்கு. அதேபோன்று களவும் கற்று மற என்ற சொல்வழக்கு உண்டு. நல்ல புத்தகம் ஒன்றை விலைக்கு வாங்கிப் படிக்கக் காசில்லை எனில், திருடியும் படிக்கலாம் என்று பெரியோர்கள் சொல்லிவைத்தார்கள் வேடிக்கையாக. ஆனால், அதையே வாடிக்கையாக்கிவிடக் கூடாது. மூன்றாவது பிச்சை எடுப்பது! ஏழ்மையைக் காரணம் காட்டி கல்வி கற்காமல் இருந்துவிடக்கூடாது; பிச்சை எடுத்தாவது கல்வி கற்கவேண்டும் என்பதை, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொல்லிவைத்தார்கள். ஆனால், இப்படி எந்த விதிவிலக்கும் இல்லாத இழிவு எது தெரியுமா? சொல்லிக்காட்டுவது! மற்றவர்களுக்கு நாம் செய்த உதவியை அடிக்கடி சொல்லிக் காட்டுவதும், மற்றவர்கள் நமக்கிழைத்த தீங்குகளை, அவர்களது குறைகளைச் சொல்லிக்காட்டுவதும்தான் இழிவிலும் இழிவானது! இப்படியான இழிவுகளை அகற்றினால், எப்போதும் கடவுள் நம்மோடு இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை!

Comments