கண்டொன்று சொல்லேல்

ஆத்திச்சூடி சிறுகதைகள்
உயிர்மெய் வருக்கம்

14..கண்டொன்று சொல்லேல்

கண்ணாற் கண்டதற்கு மாறாக சொல்லாதே
Say what you see - Don't exaggerate

குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

உரை:
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

குறள் 293:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

உரை:
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

ஒருமுறை, சரஸ்வதியின் நாயகன் பிரம்மனுக்கும் திரு மகளின் நாயகன் மகாவிஷ்ணுவுக்கும் இடையே, 'தங்களில் யார் பெரியவர்?' என்று விவாதம் எழுந்தது. நெடுநேரம் விவாதித்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த சர்ச்சை பெரிய யுத்தமாக மாறியது. இருவருக்கும் இடையே ஒளி பொருந்திய பெரிய நெருப்புத் தூணாக சிவபெருமான் நின்றார். பிரம்ம னும் விஷ்ணுவும் தங்களது சண்டையை விட்டு விட்டு, கோடி சூரிய பிரகாசத்துடன் திகழ்ந்த அந்த நெருப்புத் தூணை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அப்போது, ''ஒளி உருவில் உயர்ந்து நிற்கிறேன். உங்களில் ஒருவர் என் திருவடியையும் மற்றொருவர் என் திருமுடியையும் காண்பதற்கு முயற்சியுங்கள். அதன் பிறகு, உங்களது விவாதத்துக்கு முடிவு சொல்கிறேன்!'' என்றார் சிவபெருமான்.

இதையடுத்து, வலிமையான கொம்புகள் கொண்ட வராகமாக உருவெடுத்தார் திருமால். பூமியை அகழ்ந்து பாதாளத்துக்கும் கீழே சென்று, ஈசனின் பாதமலரைக் காண முற்பட்டார். பிரம்மனோ, அன்னப் பறவையாகி சிறகுகளை விரித்துப் பறக்கத் துவங்கினார்... ஈசனின் திருமுடியைக் காண!

ஆண்டுகள் பல கடந்தன. இருவரும் களைப்புற்ற னர். திருவடியைக் காண முடியாமல் திரும்பினார் திருமால். ஆனால், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தார் பிரம்மன். அந்த வேளையில், தாழம்பூ ஒன்று வேகமாக கீழ் நோக்கி வருவதைக் கண்டார். அதனிடம், ''எங்கிருந்து வருகிறாய்?'' எனக் கேட்டார்.

''சிவபெருமானின் திருமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். அவரின் திருமுடியைக் காண்பது, உங்களால் இயலாத காரியம்!'' என்றது தாழம்பூ. உடனே பிரம்மன், ''எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். ஒளிப் பிழம்பின் திருமுடியைக் கண்ட தாகவும், அங்கிருந்து உன்னை எடுத்து வந்ததாகவும் சொல்வேன். நீ அதை ஆமோதித்தால் போதும்!'' என்றார். தாழம்பூவும் சம்மதித்தது.

தாழம்பூவுடன் பூமிக்குத் திரும்பிய பிரம்மன், தான் திருமுடியைக் கண்டதாகவும் அதற்கு சாட்சியாக திருமுடியிலிருந்து தாழம்பூவை எடுத்து வந்ததாகவும் சிவபெருமானிடம் தெரிவித்தார்.

பிரம்மன் கூறுவது பொய் என்பதை அறிந்த சிவனார் கோபம் கொண்டார். ''பிரம்மனே... பொய்யுரைத்த உனக்கு, கோயில்களும் பூஜைக ளும் இல்லாமல் போகட்டும். தாழம்பூ, இனி எந்த பூஜைக்கும் பயன்படாது!'' என்று சபித்தார்

Comments